ரியாத் (23 அக் 2021): மக்கா மற்றும் மதீனா பெரிய மசூதிகளில் தொழுகை மற்றும் பிரார்த்தனைக்கு முழு நுழைவை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்ட பிறகு நேற்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.
மக்கா மதீனாவில் பிரார்த்தனைகளில் இப்போது சமூக இடைவெளி தேவையில்லை என அறிவிக்கப் பட்டது. அதேவெளை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விரிவான வசதிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை, மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில், டாக்டர். மாஹிர் அல்-முய்கிலி ஜும்ஆவை வழிநடத்தினார். ஜும்ஆவுக்கு அதிகமான மக்கள் வந்ததால் ஹரம் மசூதியின் 50 கதவுகள் திறந்திருந்தன. அதேபோல மதீனாவில் உள்ள மஸ்ஜித் அல்-நபாவிக்கு ஷேக் அப்துல்லா பின் அப்துர்ரஹ்மான் அல்பு ஐஜன் தலைமை வகித்தார்.
சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய அதிகமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இரு ஹரம் பள்ளிகளின் உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய, ஆண்கள் மற்றும் பெண்கள் என 4,000 தொழிலாளர்கள் உள்ளனர்.
ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு இந்த வாரம், சவுதி அரேபியாவில் கோவிட்டின் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன.. இதற்குப் பிறகு நேற்று வெள்ளிக்கிழமை முதல் புதிய விதிகளின்படி, மக்கா மதீனா ஹரமில் சமூக இடைவெளி தேவையில்லை. அனைத்து விசுவாசிகளும் தற்போது கோவிட்டுக்கு முன்பை போல் பெரிய மசூதிகளில் நுழையலாம். அதேவேளை அனுமதிப்பத்திரம் மூலம் அனைவருக்கும் தற்போது அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.