மக்கா கிரேன் விபத்து – பின்லேடன் கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Share this News:

ஜித்தா (15 பிப் 2023) மக்காவில் கிரேன் விழுந்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பின்லேடனின் கட்டுமான நிறுவனத்திற்கு 20 மில்லியன் ரியால் அபராதம் விதித்து மக்கா குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து மக்கா குற்றவியல் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது. முன்னதாக பின்லேடன் நிறுவனத்தை இந்த வழக்கிலிருந்து விடுவித்த தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு கிரேன் விபத்தில் கட்டுமான நிறுவனம் தவறு செய்ததாகவும், பாதுகாப்பு விதிகளை மீறியமை மற்றும் அலட்சியம் ஆகியவை நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11, 2015 அன்று ஹஜ் தொடங்க இருந்தபோது யாத்ரீகர்கள் கூடியிருந்தபோது கிரேன் விபத்து ஏற்பட்டது. மக்காவில் உள்ள ஹரம் மசூதியின் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த கிரேன் பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக கீழே விழுந்தது.

மக்கா பெரிய மசூதியில் மக்கள் நிரம்பியிருந்த போது கிரேன் விழுந்ததில் இந்திய யாத்ரீகர் உட்பட 108 பேர் உயிரிழந்தனர். சுமார் இருநூற்றி ஐம்பது பேர் காயமடைந்தனர்.

மக்கா பெரிய மசூதி விரிவாக்க கட்டுமான பணிக்காக ஒப்பந்தம் பின்லேடனின் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. எனவே, நிறுவனம் மற்றும் அதன் அதிகாரிகள் உட்பட பதின்மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்த விசாரணையில் கீழ் நீதிமன்றமும், மேல்முறையீட்டு நீதிமன்றமும் மோசமான வானிலையைக் காரணம் காட்டி அனைவரையும் விடுதலை செய்தன. ஆனால் இந்த தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கின் முடிவில் தற்போது புதிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *