ரியாத் (22 ஆகஸ்ட் 2025): பெட்ரோல் ஸ்டேஷனில் தீப்பிடித்து எரிந்த லாரி-யைத் துணிச்சலுடன் அகற்றி, மிகப் பெரும் விபத்தைத் தவிர்த்தவரைப் பாராட்டி, சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் ரூ. 22.3 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை பரிசாக அளித்துள்ளார்.
ரியாதிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம் அல்-சாலிஹியா (Al-Salihiya).
கடந்த வெள்ளிக்கிழமை (15 ஆகஸ்ட் 2025) அன்று அல் சாலிஹியா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில், மாடுகளுக்கான தீவனம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று தீப்பிடித்து எரிவதை அல்-தல்பாஹி (40 வயது) என்பவர் கண்டார்.
தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய லாரி டிரைவர், லாரியை பெட்ரோல் ஸ்டேஷனிலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியில் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். ஒருசிலர் வீடியோ எடுத்த வண்ணம் இருந்தாலும், யாருக்கும் துணிச்சல் வரவில்லை.
அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த அல் தல்பாஹி, தீப்பிடித்து எரியும் லாரிக்குள் தைரியமாக ஏறி, அதைப் பெட்ரோல் ஸ்டேஷனை விட்டு வெகுதூரம் ஓட்டிச் சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார்.
பெட்ரோல் ஸ்டேஷனுக்குள் லாரி இருந்திருந்தால் மிகப் பெரும் விபத்து ஏற்பட்டு பல உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டு இருக்கும். இந்நேரம்.காம்
அல் தல்பாஹியின் துரிதமான சமயோஜித செயலால், தீப்பிடித்து எரிந்த லாரி உடனே நகர்த்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உரிய நேரத்தில் பல சேதங்களைத் தவிர்க்க, தன் உயிரையே பணயம் வைத்து துணிச்சலுடன் செயல்பட்ட அல் தல்பாஹியை அப்பகுதியில் குவிந்த மக்கள் பாராட்டினர்.
சினிமாவில் நடப்பது போன்ற இச்சம்பவம், சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாய் உலகம் முழுவதும் பரவியது.
இதனைக் கேள்விப்பட்ட சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், சவூதி குடிமகனான மாஹர் ஃபஹத் அல்-தல்பாஹிக்கு, நாட்டின் உயரிய கிங் அப்துல் அஜீஸ் பதக்கம் மற்றும் 10 லட்சம் சவூதி ரியால் (2,67,000 அமெரிக்க டாலர்) பரிசாக வழங்கி கெளரவிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
‘”தல்பாஹி தன் உயிருக்கான ஆபத்தைக் கணக்கில் கொள்ளாமல், பலரது உயிர்களை காப்பாற்றும் விதமாக துணிச்சலுடன் செயல்பட்டது, சவூதி குடிமக்களின் தியாக மனப்பான்மையையும், தைரியத்தையும், அர்ப்பணிப்பு மனப்பான்மையையும், தன்னலமற்ற வீரத்தையும் காட்டுகிறது! ‘” – என சவூதி அரசுக் குறிப்பு தெரிவித்துள்ளது. – இந்நேரம்.காம்
One thought on “தீப்பிடித்து எரிந்த லாரியை அகற்றியவருக்கு ரூ. 22.3 கோடி ரூபாய் பரிசு!”
Comments are closed.