சவூதியில் உம்ரா விசா மீண்டும் தொடக்கம்!

Share this News:

இன்று ஜூன் 10 முதல் உம்ரா விசா வழங்குவதை மீண்டும் தொடங்குகிறது சவூதி அரேபியா.  உம்ரா பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறந்த வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்கும் நோக்கில் ஹஜ் பருவத்திற்கு முன்னதாக உம்ரா விசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

ஹஜ் 2025 பருவம் முடிவுக்கு வந்ததை அடுத்து, 2025 ஜூன் 10 முதல் உம்ரா விசா வழங்குவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.  மகிழ்ச்சியான இச் செய்தியை வளைகுடா நாடுகள் உட்பட உலகமெங்கிலும் இருந்து உம்ராவிற்காக சவூதி செல்லக் காத்திருக்கும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.

ஹஜ் யாத்திரை 2025 ஐ வெற்றிகரமாக நடைபெற்று அதன்மூலம் உலகமெங்கிலும் சவூதிக்கு வந்து குவிந்த 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் பயன் அடைந்தனர். ஹஜ் 2025, கடந்த சில நாட்களுக்கு முன் முடிவுக்கு வந்ததை அடுத்து, சவூதி அரேபியா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

உம்ரா செல்ல விரும்பும் பயணிகள் ஜூன் 11, 2025 முதல் சவூதிக்கு வரலாம் என்று சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

உம்ரா சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், 2025 மே 27க்குள் வெளிநாட்டு முகவர்களுடன் ஒப்பந்தங்களை இறுதிப்படுத்தி, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தங்களில் உம்ரா பயணிகள் தங்குமிடம், அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் சேவைகள் போன்றவை அமைச்சகத்தால் சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உம்ரா யாத்திரிகர்களுக்கு சிறந்த அனுபவம் வழங்க, புதுப்பிக்கப்பட்ட உம்ரா விதிமுறைகள் மற்றும் சேவை ஒப்பந்தங்களை நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும் என சவூதி அரசு வலியுறுத்தியுள்ளது.

உம்ராவிற்கான இந்த விசா வழங்கல், எதிர்வரும் 2026 ஹஜ் பருவம் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News: