தோஹா (03 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் ராட்சதப் பலூன் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த திருவிழா சமயத்தில், நகரங்கள் முழுக்க பல்வேறு வடிவங்களினால் ஆன பலூன்கள் வானில் பறப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
எதிர்வரும் டிசம்பர் 7-ஆம் தேதி துவங்கும் இந்த பலூன் திருவிழா, கத்தார் நாட்டின் தேசிய நாளான டிசம்பர் 18, 2023 வரை நடைபெறும். தோஹாவில் உள்ள கட்டாரா (Katara) பகுதியில் இந்தத் திருவிழா நடைபெறும்.
திருவிழாவின் சிறப்பு அம்சங்கள்:
கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருடமும், கத்தார் பலூன் திருவிழா அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடம் நிறைவாக நடைபெறும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
திருவிழாவில் பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் ஏராளமான ராட்சத பலூன்களில் பறக்கும் வண்ணம் அமைக்கப்படும். அத்துடன் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுகள், சர்வதேச தெரு உணவுகளை வழங்கும் உணவு அரங்கங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான “விஐபி மஜ்லிஸ்” ஆகியவை இடம்பெறும். (இந்நேரம்.காம்)
திருவிழா நடக்கும் இடத்திற்கு எப்படி செல்வது?
கத்தார் பலூன் திருவிழாவின் அமைப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹசன் அல் மௌசாவி, “பலூன்கள் பறக்கும் இடத்தைக் காண விரும்புவோர் எவரும் மெட்ரோ ரயில்கள் மூலம் கட்டாரா-வுக்கு எளிதில் செல்லலாம். மேலும் கார்கள் நிறுத்த ஏராளமான பார்க்கிங் வசதிகள் செய்யப் பட்டுள்ளன” என்று கூறினார்.
இந்த பலூன் திருவிழாவில் பலூனில் ஏறி வானில் வலம் வந்து மகிழ விரும்புவோர் asfary.com எனும் இணைய தளத்தில் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தோஹா எக்ஸ்போ 2023
கடந்த வருடம் விமரிசையாக நடைபெற்று முடிந்த FIFA உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளுக்குப் பின், உலகின் முன்னணி சுற்றுலாத் தளமாக கத்தார் விளங்குகிறது.
தற்போது சர்வதேச தோஹா எக்ஸ்போ 2023 (Doha Expo 2023 தோட்டக்கலை கருத்தரங்கம்) நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த கருத்தரங்கானது, எதிர்வரும் மார்ச் 2024 இறுதிவரை நடக்கும்.
இவ்வாறு ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்திவருவதால், பெருமளவில் சுற்றுலாப் பயணிகளும், சர்வதேச பார்வையாளர்களும் கத்தார் நாட்டில் நிறைந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
- நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)