40 ஆண்டுகளுக்கு பிறகு தொண்டை அடைப்பான் நோய்க்கு இரு குழந்தைகள் பலியாகியுள்ளனர்
எங்க ?
நம்ம தமிழ்நாட்டுல தான்..ஈரோடு மாவட்டத்துல..
அந்த நோய் கடந்த 40 வருசமா தமிழ்நாட்டுல இல்லையாமே..
தொண்டை அடைப்பான் நோய்னா என்ன ?
டிப்தீரியா என்று அழைக்கப்படும் இந்த வில்லன். ஏன் மீண்டும் வந்தது?
டிப்தீரியா எனும் தொண்டை அடைப்பான் நோய் . இதை உருவாக்கும் காரணி , கொரினிபேக்டீரியம் டிப்தீரியே (Corynebacterium diphtheriae)
இந்த நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகம் வந்த ஒரு நோயாகும்
இந்த நோயின் அறிகுறிகள் பின்வருமாறு
1. தொண்டை வலி
2. காய்ச்சல்
3. தொண்டையை சுற்றி கழலை வீக்கம்
4. தொண்டையில் மெல்லிய படலம் தென்படும்.
இந்த நோய் வந்தால்
5 முதல் 10 சதவிகிதம் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு
20 சதவிகிதத்திற்கு மேல் மரணத்தை ஏற்படுத்தும் நோயாகும்.
இந்த நோய் எப்படி பரவும் ?
இருமும் போதும் தும்மும் போதும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்
இந்தியா போன்ற மக்கள்நெருக்கடி அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்த நோய் மிக எளிதாக பரவும் .
எப்படி காச நோய் பரவுகிறதோ அதைப்போல எளிதாக இந்த நோய் பரவும்
ஆனாலும் இந்த நோய் எப்படி கட்டுக்குள் இருக்கிறது?
தடுப்பூசியை தமிழகத்தில் சிறப்பாக அமல்படுத்தியதால் இந்த நோய் கடந்த நாற்பது வருடங்களாக இல்லை
நான் முதற்கொண்டு கடந்த நாற்பது வருடங்களில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மருத்துவர்கள் இப்படி ஒரு நோயை கண்டதில்லை.
இப்போது இந்த நோய்க்கு இரண்டு மரணங்கள் ஏற்பட்டிருப்பதும் இன்னும் பல குழந்தைகளுக்கு பரவி இருப்பதும் வேதனை தருகிறது.
எப்படி இந்த நோய் தற்போது மீண்டும் தலைதூக்கியது??
தடுப்பூசியை மூடத்தனமாக எதிர்ப்பவர்கள் பேச்சைக் கேட்டு சரியாக தடுப்பூசி போடாததால் இப்போது மீண்டும் தலை தூக்கியிருக்கிறது
குழந்தை பிறந்த
45 ஆவது நாள்
75 வது நாள்
105 வது நாள்
இந்த மூன்று முறையும் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக போடப்படுகிறது
மீண்டும் குழந்தையின் ஒன்றரை வயதில் இதற்கான தடுப்பூசி போடப்படுகிறது
இந்த ஒன்றரை வயது வரை நன்றாக தடுப்பூசி கொடுக்கும் பல பெற்றோர்..
ஐந்து வயதில் இந்த நோய்க்கு தர வேண்டிய இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை மறந்து விடுகின்றனர்
இந்த ஐந்தாவது வயதில் போடப்பட வேண்டிய டிபிடி பூஸ்டர் ஊசி அதிமுக்கியம் வாய்ந்தது.
தற்போது பத்து மற்றும் பதினைந்து வயதுகளிலும் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்படுகிறது.
ஆகவே, இந்த நோயை மேலும் தமிழகத்தில் பரவாமல் தடுக்கவும்
இந்த நோயால் மரணம் நிகழ்வதை தடுக்கவும்
உங்கள் குழந்தைகளுக்கு
ஒன்றரை மாதம்
இரண்டரை மாதம்
மூன்றரை மாதம்
ஒன்றரை வயது
ஐந்து வயது
பத்து வயது
பதினைந்து வயது
ஆகிய வயதுகளில் தடுப்பூசிகளை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் அனைத்து புதன் கிழமைகளில் கொடுத்து உங்கள் குழந்தைகளை காத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் பேச்சைக்கேட்டு தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடாமல் விடுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தெரிந்தே தீங்கிழைத்தவர்கள் ஆவார்கள்.
இந்த நோய் பரவுவதை தடுப்பது சமூகத்திற்கு மிக முக்கியம். ஆகவே இந்த நோய் இருக்கும் அறிகுறிகள் தென்படின் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நாடவும்
எரித்ரோமைசின் மற்றும் பென்சிலின் ஆண்டிபயாடிக் கொடுத்தால் நன்றாக செயல்படும்.
இந்த நோய் பரவி வரும் ஊர்களில் அரசு பள்ளி பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தடுப்பூசி வழங்கிவருகிறது.
உங்கள் குழந்தைக்கும் தடுப்பூசி கிடைத்ததா என்பதை உறுதி செய்யுங்கள்
தங்கள் குழந்தைகளின் இன்னுயிரை காப்பது உங்கள் கடமை.
Dr .ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை