சென்னை (21 ஏப் 2020): தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 178 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 20 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். அங்கு கொரோனா பாதிப்பினால் அனுமதிக்கப்பட்ட 124 நபர்களில் 71 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு இன்று வீடு திரும்பினர். இவர்கள் அனைவரையும் கைதட்டி வாழ்த்துகளை கூறி மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்ட ஆட்சியர் திரு.கோவிந்த ராவ், அனைவருக்கும் குண்மடைந்ததற்கான சான்றிதழை வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர், இன்று குணமடைந்து வீடு திரும்பினர். திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து 39 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 27 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துமனையில் கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 32 பேர் இன்று வீடு திரும்பினர். கோவை மாவட்ட ஆட்சியர் திரு.ராசாமணி, மேற்கு மண்டல ஐ.ஜி திரு.பெரியய்யா ஆகியோர் பழக்கூடைகளை வழங்கியும், கைதட்டியும் அவர்களை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
வீடு திரும்பிய் அனைவரும் மேலும் இரு வாரங்களுக்கு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.