சென்னை (22 மார்ச் 2021): சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை கந்தன்சாவடி, தரமணி, பெருங்குடி ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வரக்கூடிய தனியார் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய நபர்களில் 2 பேருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் அந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பரிசோதனையின் முடிவில் 40 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. 40 பேருக்கு கொரோனா உறுதியானதால் மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிறுவனத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.