சென்னை (15 பிப் 2022): பிளஸ் டூ திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தளர்வுகள் காரணமாக அன்றாடம் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.
தேர்வுகள் நடந்து வரும் நிலையில் முன்னதாக 12 ஆம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்புதல் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள்கள் கசிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்த விசாரணையில் திருவண்ணாமலையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் இருந்து தான் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிந்த முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளிகள் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தொடர்புடைய இரு பள்ளிகளுக்கு நோட்டிஸ் அனுப்பி பள்ளி கல்வித்துறை விளக்கம் கேட்கவுள்ளது.