சென்னை (31 ஜன 2021): பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து சென்னை வரும் சசிகலாவின் காரில் அதிமுக கொடி பறப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக கடந்த 20 -ம் தேதி லேசான கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்தவர் மருத்துவமனையில் இருந்தே நேரடி விடுதலை செய்யப்பட்டார். இதற்கான ஒப்புதலும் சிறைதுறை சார்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் உடல் நிலையில் சசிகலாவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று பிற்பகல் சுமார் 12 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, மருத்துவமனையிலிருந்து காரில் புறப்பட்டார். அப்போது அ.தி.மு.க கொடி கட்டப்பட்ட காரில் அவர் சென்றார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைக்குப் பின் அ.தி.மு.க வை மீட்டெடுப்பதே சசிகலாவின் முதல் பணியாக இருக்கும் என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்து வரும் நிலையில் காரில் அ.தி.மு.க கொடி கட்டப்பட்டுள்ளது, அதனை உறுதி படுத்தும் வகையில் இருக்கிறது. இது எட்டப்பாடி தரப்பையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.