சென்னை (06 அக் 2020): அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பதவியை பறிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை மதுசூதனன் மறுத்துள்ளார்.
சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில் அதிமுகவில் சலசலப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், “அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவியை என்னிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாது.
அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவியில் இருந்து நான் மாற்றப்படுவதாக வெளியான தகவல் தவறு. மதுசூதனன் சாகும் வரை அவர் தான் அவைத்தலைவர் என ஜெயலலிதா கூறியிருக்கிறார். அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவியில் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையனை நியமிக்க சசிகலா திட்டமிட்டார். ஓ.பி.எஸ். எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவார். பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.” இவ்வாறு மதுசூதனன் தெரிவித்தார்.