சென்னை (02 பிப் 2020): அதிமுக எம்பி சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார்.
சசிகலா புஷ்பா. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தூத்துக்குடி நகராட்சி மேயராக இருந்த சசிகலா புஷ்பா, 2014ஆம் ஆண்டு அதிமுக மாநிலங்களவை உறுப்பினரக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், ஜெயலலிதா என்னை அடித்தார் என்று கூறி கடந்த 2016ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பரபரப்பை கிளப்பினார். இதன் தொடர்ச்சியாக, அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.
அதேசமயம் வேறு சில கட்சிகளுடன் நெருக்கம் காட்டிய சசிகலா புஷ்பா, தனது எம்.பி. பதவியை கட்சித்தாவல் தடை சட்டத்தின் மூலம் சபாநாயகர் பறிக்க கூடாது எனவும் சுயேட்சை எம்.பி.யாக அறிவிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அத்துடன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அக்கட்சியின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக விருப்பமனு வழங்கப்பட்டது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் அலுவலகத்தில் விருப்பமனு வாங்க வந்த சசிகலா புஷ்பாவின் முதல் கணவர் லிங்கேஸ்வரன் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது.
இதனிடையே, சட்ட ஆலோசகர் ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அங்கத்தில் பொறுப்புகளை வகித்து வருபவர். அதன் மூலம் பாஜக தலைவர்களிடம் நெருக்கம் காட்டி வந்த சசிகலா புஷ்பா, பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளையும் பேசி வந்தார்.
இந்நிலையில், டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட முன்னிலையில் பாஜகவில் சசிகலா புஷ்பா இணைந்துள்ளார்.