சென்னை (18 அக் 2020): நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 பேரின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் முறைகேடாக தேர்ச்சி அடைந்து, மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதில் மாணவர்கள், பெற்றோர், இடைத்தரகர் என 15க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலியாக ஆவணங்களை தயாரித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. மேலும் ஆள்மாறாட்டம் செய்து எழுதிய 10 மாணவர்களின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் கடந்த பிப்ரவரியில் வெளியிட்டனர்.
10 பேரின் விவரங்களை கேட்டு ஆதார் ஆணையத்திற்கு சிபிசிஐடி கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 மாணவ, மாணவிகளின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் பதிலளித்துள்ளது.