சென்னை (01 ஜூலை 2021): ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தும் செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுகளை தடை செய்யவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து கண்காணிப்பதற்கான நடைமுறையைக் கொண்டு வரக்கோரியும் மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் அஜரான வழக்கறிஞர், “ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகளும், இளம் பருவத்தினரும், மாணவர்களும் விளையாட்டுகளில் உள்ள கதாபாத்திரங்களாக மாறிவிடுவதுடன், வன்முறை எண்ணங்களுக்கும் உள்ளாகின்றனர்” என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பலரும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர். அதேசமயம், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுகளுக்கு அவர்கள் அடிமையாகி விடுவது வேதனை அளிப்பதாக உள்ளது.
படிப்பு மற்றும் விளையாட்டு போன்ற காரணங்களுக்காக அதிக அளவில் மொபைல் மற்றும் கணினி பயன்படுத்தும் மாணவர்கள், அதிகப்படியான கோப மனநிலைக்கும், தற்கொலை முயற்சிக்கும் ஆளாகின்றனர். குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் தடுக்க அரசுகள் தான் முடிவெடுக்க முடியும்.
செல்போன், ஆன்லைன் விளையாட்டுகளால் பெற்றோர் மற்றும் பெரியோரிடம் கூட குழந்தைகள் பேசுவது குறைந்து வருகிறது.
பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும். குழந்தைகளை மாலையில் உடலுக்கு வலு சேர்க்கும் விளையாட்டுகளில் ஈடுபடுத்த அறிவுறுத்த வேண்டும்.
குறிப்பாக, குழந்தைகளுக்கு தங்களை தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும் சுய ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இத்தகைய விவகாரங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்” என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பின்னர், மனுதாரரின் புகார் தொடர்பாக 4 வாரங்களில் பரிசீலித்து 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.