சென்னை (27 ஏப் 2020): பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக டாக்டர் சைமனின் உடலை மீண்டும் வெளியே எடுக்க சென்னை மாநகராட்சி மறுத்துவிட்டது.
நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்ட சென்ற போது மக்கள் சிலர் கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும் என்ற அச்சத்தில், மருத்துவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய விடாமல், தடுத்து நிறுத்தியதோடு, அவரைக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மருத்துவர் சைமனின் உடலுடன் வந்தவர்கள் மீது கற்கள், பாட்டில்களையும் வீசி தாக்கியுள்ளனர். இதில், ஆம்புலன்ஸ் ஒட்டுநருடன், சில சுகாதாரத்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் போலீசாரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து, இரண்டு மயானங்களிலும் அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சிலரே, மருத்துவர் சைமனின் உடலை வேலாங்காட்டு கல்லறையில், கையாள் மண் அள்ளிப் போட்டு மூடியுள்ளனர்.
இதன்பின்னர் மருத்துவர் சைமனின் மனைவி, “என் கணவரின் உடல் சீல் போட்ட பெட்டியில்தான் புதைக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே எடுத்து எங்கள் முறைப்படி கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் என் கணவர் சைமனின் கடைசி ஆசை. இரு பிள்ளைகளுடன் விதவையாக இருக்கும் நான், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கும் உருக்கமான வேண்டுகோள் இது,” என்று கண்ணீர் மல்க பேசினார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மருத்துவர் சைமன் மனைவியின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சைமனின் உடலை வெளியே எடுத்தால், அது பாதுகாப்பு பிரச்னைகளை உருவாக்கி விடும் என்றும், இதனால் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.