சென்னை (19 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டம் தொடர்ந்து 6 வது நாளாக தொடர்கிறது.
டெல்லி ஷஹீன் பாக் மாடலாக சென்னையிலும் 6-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு அவ்வப்போது உணவு, குடிநீர், சர்பத், பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை போராட்டக்குழுவினர் வழங்கி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் விதமாக போலீசார் சார்பில் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் போராட்டக்காரர்களை போலீசார் கண்காணிக்க இருக்கிறார்கள். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் போராட்டக்குழுவினர் பார்த்துக்கொள்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு அனைத்து எதிர் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் சாதி மத பேதமின்றி ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே இன்று காலை 10 மணிக்கு அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளதால் சென்னை பரபரப்பாக காணப்படுகிறது.