சென்னை (13 ஜூன் 2021): மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு விடுப்பு எடுத்த மாணவியை, பாலியல் ரீதியான கேள்விகள் மூலம் ஆசிரியர் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சின்மயி தனது ட்விட்டரில் பதிவிடுகையில் பிஎஸ் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த 8 பேரில் ஒருவர் பெண் குழந்தைகளை தவறாக படமெடுத்துள்ளார். அந்த 8 பேர் ஞானசேகரன், குருமூர்த்தி, பத்மநாபன், கலைமணி, பிரபாகரன், சிவக்குமார், வெங்கட்ராமன், ரவிச்சந்திரன், சாய்பிரசாத் ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுத்து தவறாக படமெடுத்ததாக கூறியுள்ளனர்.
அதிலும் ஒரு மாணவி கூறுகையில் மாதவிடாய் காரணமாக அதிக வயிற்று வலியால் ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துவிட்டேன். மறுநாள் சென்ற போது ஆசிரியர் ஒருவர் ஏன் வரவில்லை என கேட்டார், நான் உடம்பு சரியில்லை என்றேன். ஆனால் கேள்வி மேல் கேள்வி நான் மாதவிடாய் விஷயத்தை சொல்லும் வரை விடவே இல்லை.
பின்னர் அந்த விஷயத்தை சொன்னவுடன், திரும்ப திரும்ப என்னிடம் காரணம் கேட்டு ரசித்தார். இந்த வலி வாழ்க்கை முழுவதும் இருக்கும். அதற்காக விடுமுறை எடுப்பியா என கேள்வி கேட்டார் என அந்த மாணவி கண்ணீர் மல்க கூறியதையும் சின்மயி தெரிவித்துள்ளார்.