நாகர்கோவில் (13 ஏப் 2020): கொரோனா தடுப்பு பணியில் இரவு பகலாக உழைக்கும் பெண் துப்புரவு தொழிலாளர் ஒருவர் குப்பை வண்டியிலையே உறங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசுடன் இணைந்து மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் போன்றோரும் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், குப்பை அள்ளும் வாகனம் ஒன்று ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது அந்த வாகனத்தில் இருக்கும் குப்பை தொட்டி ஒன்றில் பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர் தன்னையும் மறந்து அசதியில் தூங்கியுள்ளார்.
நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முளகுமூடு என்ற பகுதியில் நடந்த இந்த காட்சியை தக்கலை சரக டி.எஸ்.பி ராமசந்திரன் அவர்கள் ரோந்து பணியின் போது தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.