அதிமுகவுக்கு ஆப்பு வைக்க தயாராகும் பாஜக!

Share this News:

சென்னை (30 டிச 2020): தேர்தலுக்கு பிறகே முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என்பதாக பாஜக தெரிவித்துள்ளது அதிமுக கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் கடந்த சில தினங்களாக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜக தலைவர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் என்று கூறுவது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு அமைச்சர்கள் அவ்வப்போது பதில் அளித்து வருகின்றனர்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடரும் என்றும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக, பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.

தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மையைப் பொருத்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூடி முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என்றும் சி.டி.ரவி கூறினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் அதிமுக பாஜக இடையே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply