ஆக்லாந்து (11ஆக 2020):உலகளவில் இதுவரை 2,02,80,518 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,39,761 பேர் உயிரிழந்துள்ளனர். சரிவில்லா பொருளாதாரம் மிக நேர்தியும் வலுவும் மிக்கதொரு சுகாதார கட்டமைப்பு, நேர்மையான ஆட்சிமுறை உள்ள நாடுகள் கூட கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
எனினும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகக் காட்டப்படும் நியூசிலாந்து நாடு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற நாடுகளில் இருந்து நியூசிலாந்து வருவோர் ஒவ்வொருவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு முறையாக கண்காணிக்கப்படுகின்றனர். அதனால் அந்நாடு படிப்படியாக கொரேனா பாதிப்பிலிருந்து மீண்டு, பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது.
இந்நிலையில் தற்போது திடீரென்று, நியூசிலாந்தில் உள்ள 102 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்ந்hட்டில் உள்ள ஆக்லாந்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும், ஆனால் யாரிடம் இருந்து அது தொற்று பரவியது என்பது தொடர்பான தகவல்கள் இல்லை என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
இத்துணை நாட்களுக்கு பிறகு, அங்கு உள்ளூர் மக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாவது இதுவே முதல்முறை. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு மட்டும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமது அரசு தீவிரமாக போராடி வருவதாகவும் நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இனிவரும் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு நியூசிலாந்து தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.