சென்னையில் கொரோனா பாதித்த புற்று நோயாளிகள் குணமடைந்தனர்!

Share this News:

சென்னை (14 மே 2020): சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் புற்று நோய் பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளில் பலர் எவ்வித தீவிர விளைவுகளும் இன்றி குணமடைந்து வீடு திரும்பியவர்கள் அதிகம். அதில் குறிப்பாக வயதானவர்களுக்கும், ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு நோய் தீவிர தன்மையடைந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருந்தது.

அதில் குறிப்பாக இதுவரை 22 புற்றுநோய் நோயாளிகள், 15 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள், இரண்டு எச்ஐவி நோயாளிகள் மற்றும் இரண்டு கல்லீரல் செயலிழப்பு நோயாளிகள் கொரோனா தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர். பல்வேறு நோய்களுடன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பல்துறை வல்லுநர்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் பொழுது அந்த சிகிச்சையும் வழங்கப்பட்டது.

22 புற்றுநோய் நோயாளிகளில் வாய் தொண்டை மற்றும் கழுத்துப்பகுதி பாதிக்கப்பட்ட 13 பேரும், மலக்குடல் புற்றுநோய் நோயாளி ஒருவரும், கர்ப்பப்பை புற்றுநோய் நோயாளிகள் இரண்டு பேரும், கர்ப்பப்பை வாய் புற்று நோய் கொண்ட இரண்டு பேரும், தொடையில் புற்றுநோய் ஏற்பட்ட ஒருவரும், ரத்த புற்றுநோய் ஏற்பட்ட மூன்றுபேரும் குணமடைந்துள்ளனர். அதில் இரு புற்று நோய் பாதித்தவர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே. அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பெரும் சவாலை எதிர்கொண்டு இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் ஏறத்தாழ 60% பேருக்கு நீரிழிவு நோயும், 40% பேருக்கு உயர் ரத்த அழுத்த நோயும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News: