சென்னை (19 மார்ச் 2020): தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் கரோனா பாதிப்பு மூன்றாக உயர்ந்திருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த தகவலைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
மார்ச் 17-ம் தேதி அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த மாணவருக்கு நேற்று கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு செய்யப்பட்ட சோதனை முடிவுகள் கரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.