சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தனர்.
2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இது மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தடியடி நடத்த யார் உத்தரவிட்டது? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, , “வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்ற போது ஒத்துழைக்க மறுத்து காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தினர். காவலர்கள் மீது செருப்பு, கற்கள், பாட்டில்கள் வீசப்பட்டது. இதுவரை 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் நோயால் இறந்ததை போலீஸ் தடியடியால் இறந்ததாக வதந்தி பரப்பி மாநிலம் முழுவதும் போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர். சில சக்திகளும், விஷமிகளும் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளன. இஸ்லாமியர்களுக்கு அரணாக அதிமுக அரசு இருக்கும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.”
இதனிடையே முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.