திமுக காங்கிரஸ் விரிசல் – துரை முருகன் பரபரப்பு தகவல்!

Share this News:

வேலூர் (15 ஜன 2020): திமுகவிலிருந்து காங்கிரஸ் விலகினால் அதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் காட்பாடியில், பொங்கல் பண்டிகையையொட்டி, தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தி.மு.க-வினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்,“தி.மு.க ஆட்சியில் கிராமந்தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

அதனை அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்ததைப்போல் படம் எடுத்துக்கொள்கிறார்கள். குளங்களைத் தூர்வாருவதாக சொன்னார்கள். அதன்பிறகு, விவசாயிகள் ஏரி மண்ணை எடுத்துக்கொள்ளலாம் என்றார்கள்.

இதிலிருந்து என்னத் தெரிகிறது என்றால், விவசாயிகள் பள்ளம் எடுத்ததைத் தூர்வாரியதாக கணக்குக்காட்டி கொள்ளையடித்தனர். சென்னை புத்தக கண்காட்சியில், தமிழக அரசின் ஊழல் குறித்து புத்தகம் வைத்த பத்திரிகையாளரை கைதுசெய்தது, ஜனநாயக நாட்டில் அரங்கேறும் செயல் இல்லை.

ஊழலை மறுத்திருக்கலாம். தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகிச் சென்றால் எங்களுக்குக் கவலையில்லை. அதனால், எந்த நஷ்டமும் இல்லை. காங்கிரஸுக்கு ஓட்டு கிடையாது. அவர்கள் விலகுவதைப் பற்றி கவலைப்படவில்லை. எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை’’ என்றார்.

உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, தி.மு.க-வை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் துரைமுருகனின் பேச்சு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த், அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *