அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Share this News:

சென்னை (07 அக் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சமி ஒருமனதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்ற குழப்பம் ஏறக்குறைய இரண்டு மாத காலமாக நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால், ஆளும் அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது.

இன்று காலையிலும் ஆலோசனை நீடித்தது. சென்னையில் உள்ள தங்களது இல்லங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே ஆலோசித்தனர். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதிக்கட்டமாக ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டனர்.

இதேபோல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். ஏராளமான தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் திரண்டனர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்நிலையில் காலை 10 மணியளவில் அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என அறிவித்தார். கட்சியின் முடிவுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


Share this News:

Leave a Reply