24 மணிநேரத்தில் கொரோனா குணமாகும் – சித்த மருத்துவர் கைது!

Share this News:

சென்னை (06 மே 2020): கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக வதந்தி பரப்பிய போலி சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட முதல் வீடியோவில், கொரோனா மட்டுமல்ல எந்த வைரஸ் வந்தாலும் அதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று சொன்னார்.

இதையடுத்து ஜனவரி 27ம் தேதி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருத்தணிகாசலம், தனது ரத்னா சித்த மருத்துவமனை சார்பில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பிரகடனம் செய்தார்.

மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை 24 மணி நேரத்தில் குணமாக்கி காட்டுவேன் என்று முதலில் சொன்னவர், பின்னர் 5 நாட்களில் குணமாக்கித் தருவதாக சவால் விடுத்தார். இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் கொடுக்கலாம் என்ற பிரசாரத்தை முகநுாலில் தொடங்கினார். அவர் பேசத் தொடங்கிய சில நாட்களில் தமிழக அரசு, கபசுரக் குடிநீரை நோய் எதிர்ப்பு சக்திக்காக பரிந்துரைத்தது.

இதையடுத்து திருத்தணிகாசலத்தின் பேட்டிகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதேநேரம் அவரும் தனது முகநுால் பக்கத்தில் தினசரி ஒரு வீடியோ வீதம் வெளியிட்டு வந்தார். கொரோனா வைரசுக்கு, தான் கண்டுபிடித்த மருந்தைக் கொடுத்து சுவிட்சர்லாந்து, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குணமடைந்து விட்டதாக அறிவித்த திருத்தணிகாசலம் அவர்களது வாக்குமூல வீடியோக்களையும் தனது முகநுால் பக்கத்திலேயே வெளியிட்டு வந்தார்.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக , திங்கட்கிழமை அன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்கம் வெளியிட்ட அறிக்கையில், திருத்தணிகாசலம் மத்திய மாநில அரசுகளால் அங்கீகாரம் பெறாத ஒரு போலி மருத்துவர் என்றும் கொரோனா வைரசுக்குகு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தவறான செய்திகளைப் பரப்பி வருவதாக குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் திருத்தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் உங்களிடம் கொரோனாவுக்கு என்ன மருந்து இருக்கிறது. உண்மையிலேயே நீங்கள் சித்த மருத்துவர்தானா, உங்களிடம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றன. நீங்கள் தயாரித்த மருந்தை இங்கு யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறீர்கள் என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.


Share this News: