சென்னை (03 ஜூன் 2020): கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பைக்கில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி 500 முதல் 950 வரை நோய் தொற்று உயர்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
மேலும், வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதமாகவும், நடந்து செல்லும் போது முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், கார்களில் பயணம் செய்தால் ஓட்டுனர் உட்பட 3 பேரும், பைக்கில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.