ஓசூர் (05 ஜன 2022): பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன் ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார்.
அவரை கைது செய்ய கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 20 நாட்களாக தேடி வந்தனர். கர்நாடகாவின் ஹாசன் பகுதியில் பதுங்கியிருந்த ராஜேந்திர பாலாஜியை காவல் தனிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.