சென்னை (22 பிப் 2023): நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை நேற்று சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.
நடிகை காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.
காயத்ரி ரகுராமுக்கும், மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்ததை அடுத்து, கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.
இதையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். தற்போது பாஜகவில் இருந்து வெளியேறியுள்ள காயத்ரி ரகுராம் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை நேற்று சந்தித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் காயத்ரி ரகுராம், எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது. விசிக தலைவர், எம்.பி., அண்ணா தொல் திருமாவளவன் அவர்களுக்கும், விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு இது என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு திரு.சீமான் அண்ணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்ததற்காக நன்றி கூறுவேன் என்று பதிவிட்டுள்ளார்.