மதம் சார்ந்து பார்க்காமல் தமிழக மக்கள் நலன் பாதுகாப்பு – கவர்னர் உரை!

Share this News:

சென்னை (06 ஜன 2020): தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும். என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது.

2020-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

முதல் நாளான இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றினார். அந்த உரையில் இடம் பெற்றிருந்த முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவி செய்ய பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில் 563.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதற்கான திட்டம் தீட்டப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

14-வது நிதிக்குழுவின் நிதிப்பகிர்வு முறையின்படி, இத்தொகையில் 42 சதவீதம் மட்டுமே மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டது. இதன் விளைவாக, தமிழ்நாட்டிற்கு 4,073 கோடி ரூபாய் நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகையை நமது மாநிலத்திற்கு விரைவாக விடுவிக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும். தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்.

இன்றைய நிலவரப்படி, 17 மீனவர்கள் மட்டுமே இலங்கை அரசின் சிறைக் காவலில் உள்ளனர். அவர்களையும் விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு, அதன்கீழ் 9.77 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 5.18 லட்சம் மனுக்களுக்கு 40 நாட்களுக்குள்ளேயே மக்களுக்கு உதவும் வகையில் தீர்வு காணப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவு மண்டபம் 50.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் கட்டி முடிக்கப்படும்.

தமிழ்நாடு தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலமாக இருப்பதால் அதன் நீர் தேவைகளை நிறைவு செய்வதற்கு, வடிநிலங்களுக்கு இடையே நதிநீரை மடை மாற்றம் செய்வது அவசியமாகிறது. இதன் முதல் கட்டமாக கோதாவரி ஆற்றிலிருந்து குறைந்தபட்சம் 200 டி.எம்.சி. தண்ணீரையாவது காவிரி வடிநிலத்திற்கு வழங்க வேண்டுமென மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு தன் பங்காக, தமிழ்நாட்டிற்குள் பாய்கின்ற நதிகளை இணைக்கும் பணியை மேற்கொள்ளும் விதமாக காவிரி-குண்டாறு ஆறுகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும். இதில் முதல் கட்டமாக முதல்-அமைச்சர் முன்னரே அறிவித்தவாறு காவிரி-தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டு நிலவிய சாதகமான பருவமழை மற்றும் சிறந்த நீர் மேலாண்மையின் மூலம் கடைமடைப் பகுதி வரை பாசன நீர் சென்றடைந்தால், பயிரிடும் பரப்பளவு 7 லட்சம் ஏக்கர் வரை அதிகரித்துள்ளது. உணவு தானிய உற்பத்தி 115 லட்சம் மெட்ரிக் டன் அளவை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் காப்பீடு இழப்பீட்டுத் தொகை 7,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தமிழ்நாட்டு விவசாயிகள் பெற்றுள்ளனர்.

கால்நடைத் துறைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு முதல்- அமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

மூக்கையூர் மற்றும் குந்துக்கல்லில் முறையே 120 கோடி மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மீன்பிடித்துறை முகங்கள் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பள்ளத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்பட உள்ளது.

திருவொற்றியூர் குப்பம், தரங்கம்பாடி மற்றும் முதுநகரில் 420 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் பிடி துறைமுகங்களை அமைப்பதற்கு மத்திய அரசு மற்றும் நபார் வங்கியிடம் இருந்து இசைவு பெறப்பட்டுள்ளது.

முழுமையான கணினி மயமாக்கப்பட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட பொது விநியோக அமைப்பு நடைமுறைகளினால், “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தை தமிழ்நாடு அரசால் நடைமுறைப்படுத்த முடிகிறது.

2019-ம் ஆண்டு ஜனவரி மாத உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக, 10.5 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 3,00,501 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதுவரை 53 திட்டங்களுக்கான தொழில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதோடு, 219 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பின்னர் 63 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு 19,136 கோடி ரூபாய் முதலீடு பெறவும், 83,837 புதிய வேலைவாய்ப்புகளைத் தோற்றுவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாட்டில் உள்ள தொழில் துறை வேலைவாய்ப்புக்கு முதுகெலும்பாகத் தொடர்ந்து விளங்கி வருவதுடன், 21.53 லட்சம் பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம் 1.38 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை இணைப்பதற்காக, தமிழ்நெட் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் பங்களிப்பின் வாயிலாக விரிவான பகுதி மேம்பாட்டு அணுகுமுறையை கடைபிடித்து உலக தரத்திலான உட்கட்டமைப்புகளுடன் ஆறு சுற்றுலா வட்டங்களில் 295 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.

17,850 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தித் திறனை நிறுவும் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 13,319 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனை கொண்டு உலக அளவில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 6,448 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தினால் பயன் அடையக்கூடிய பகுதியில் சாலை தொடர் அமைப்பை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் 2,673.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தச்சூர் வரையிலான சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டத்தின் முதற் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இச்சாலையின் மீதமுள்ள பகுதிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பயனாக 2016-ம் ஆண்டில் 71,431 ஆக இருந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 63,923 ஆகவும், சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2016-ம் ஆண்டில் 16,092-ல் இருந்து 2018-ம் ஆண்டில் 11,378 ஆகவும் கணிசமாக குறைந்துள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 10,000 வாகனங்களுக்கு சராசரியாக 12 ஆக இருந்தது. 2016-ம் ஆண்டில் இது மூன்றாக குறைந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரெயிலின் முதற்கட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. திருவொற்றியூர், விம்கோ நகர் வரையிலான முதற்கட்டத்தின் நீட்டிப்பு பணிகள் 2020-ம் ஆண்டின் மத்தியில் நிறைவடையும். மேலும் 69,180 கோடி ரூபாய் செலவில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மூன்று வழித்தடங்களை அமைக்கும் இரண்டாம் கட்ட திட்ட பணிகளை செயல்படுத்த அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.

தாம்பரம்-வேளச்சேரி வழித்தடத்தில் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு 15.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரெயில் போக்குவரத்து முறை ஒன்றினை அரசு அமைக்கும். இதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தயாரிக்கும்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான பணிகள் 3,267.25 கோடி ரூபாய் செலவில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுய உதவிக் குழுக்கள், கிராமப்புற வறுமை ஒழிப்புக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் போன்ற சமுதாயம் சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சமூக- பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளன. 2019-20-ம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு 12,500 கோடி ரூபாய் அளவிற்கு கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், குழந்தைப் பிறப்பில் பாலின விகிதம் 917 என்ற அளவில் இருந்து 943 ஆக அதிகரித்துள்ளது. பொது மற்றும் தனியார் இடங்களில் வன்முறைக்கு ஆளாகும் சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும் பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடியாக உதவி கிடைப்பதை தமிழ்நாடு உறுதி செய்துள்ளது.

மொத்த ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 29.80 லட்சம் ஆகும். நடப்பாண்டு முதல், தகுதி வாய்ந்த மேலும் 5 லட்சம் நபர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும்.

சமூக நீதியை காப்பதில் உறுதி கொண்டுள்ள இந்த அரசு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு என மாநிலத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகப் பாதுகாக்கும். வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.

இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply