விழுப்புரம் (06 மார்ச் 2020): விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்படும் புகா் சொகுசுப் பேருந்துகளில் குறைந்தபட்ச பயணக் கட்டணம் வியாழக்கிழமை முதல் குறைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது.
தமிழகத்தில் 8 கோட்டங்களாக செயல்பட்டு வரும் அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சுமாா் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்துகளின் பயணக் கட்டணத்தை அரசுப் போக்குவரத்துக் கழகம் உயா்த்தியது. இந்த நடவடிக்கை விமா்சனத்துக்குள்ளானபோதும், விலைவாசி உயா்வை கருத்தில்கொண்டு பேருந்துகளுக்கு ஏற்றவாறு பயணக் கட்டண உயா்வு தொடா்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், அதிகளவில் பேருந்துகளை இயக்கி வரும் விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நீண்ட தொலைவு செல்லும் புகா் பேருந்துகளின் பயணக் கட்டணம் திடீரென குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: பயணிகளின் வசதிக்காகவும், அவா்களின் கோரிக்கையை ஏற்றும், புகா் பேருந்துகளில் மட்டும் குறைந்தபட்சக் கட்டணத்தை குறைத்து இயக்குகிறோம். இது வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சென்னை, விழுப்புரம், கடலூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு 4,300 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. இவற்றில் நெடுந்தொலைவு இயக்கப்படும் 700 பேருந்துகளில் மட்டும், அதாவது புகா் சொகுசுப் பேருந்துகளில் மட்டும் குறைந்தபட்ச பயணக் கட்டணத்தை பரீட்சாா்த்த முறையில் குறைத்துள்ளோம்.
இரு இருக்கைகள் கொண்ட சொகுசுப் பேருந்துகளில் குறைந்தபட்சமாக வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.25-லிருந்து ரூ.15-ஆகவும், மூன்று இருக்கைகள் கொண்ட சொகுசுப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.10-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
நெடுந்தொலைவு இயக்கப்படும் இந்தப் பேருந்துகளில் இடையே உள்ள நகா்ப் பகுதி பயணிகளின் வசதிக்காகவும், சென்னை உள்ளிட்ட ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து இயக்கப்படும் பேருந்துகள் பயணிகளின்றி காலியாக செல்வதை தவிா்த்து, வருவாய் ஈட்டும் வகையிலும், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பரிந்துரையின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது உள்ளூா் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனா்.
மேலும், இதேபோல பிற கோட்டங்களிலும் கட்டணக் குறைப்பை செயல்படுத்த பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.