சென்னை (12 மே 2020): தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்கள் எப்போது திறக்கப்படும்? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 23 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட மே 17 வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 4ம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்டவை பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோவில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
” மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவை இல்லாத மதுபான கடைகளை திறக்க அனுமதித்த அரசு, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்க கூடிய, சாதகமான எண்ண ஓட்டத்தை உருவாக்கக் கூடிய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கவில்லை.
ஊரடங்கு உத்தரவால் நிதிநிலைமை பாதிக்கப்படுகிறது என்று சில நிறுவனங்களை இயக்க அனுமதித்த தமிழக அரசு, மனதளவில் பாதிக்கப்பட்டும், நிம்மதி இழந்திருக்கும் தன்னை போன்றவர்களுக்கு மத வழிபாட்டுத் தலங்களை ஒரு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இஸ்லாமியரின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்கு சென்று வர முடியவில்லை. முன்னோர்கள் பின்பற்றிய வழிபாட்டு முறைகளை அந்தந்த இடங்களுக்கு சென்று நிறைவேற்ற முடியாத மன அழுத்தத்தில் பலரும் உள்ளனர்.” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனு விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால் தமிழக அரசு வருகிற 15 அல்லது 16 தேதிகளில் மத வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து உரிய முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.