சென்னை (15 ஏப் 2020): ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ 5200 ஐ கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் ஏழம் வகுப்பு மாணவர் சல்மான் ஃபாரிஸ்.
மேற்கு மாம்பலம் கஸ்தூரிபாய் நகர், கல்யாண சுந்தரம் தெருவில் வசிப்பவர், ஏழாம் வகுப்பு மாணவர் சல்மான் ஃபாரிஸ். இவர் அவரது பெற்றோர் அவ்வப்போது வழங்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். எதிர் வரும் ரம்ஜான் பண்டிகைக்காக இந்த பணத்தை அவர் சேர்த்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பொதுமக்களிடம் நிதி கோரியிருந்தது. இதனை அடுத்து சல்மான் ஃபாரிஸ் அவரது சேமிப்பு பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து தாம்பரம் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு தனது பணத்தை ஒப்படைக்க பெற்றோருடுடன் சென்றார். அங்கு பரங்கிமலை காவல்துறை ஆணையர் பிரபாகரன் முன்னிலையில் வருவாய் கோட்டாச்சியர் ராஜ்குமாரிடம் தனது சேமிப்பான ரூ 5200 ஐ வழங்கினார். மேலும் அந்த பணம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிசிடம் ஒப்படைக்கப் பட்டது.
சிறுவன் சல்மான் ஃபாரிஸின் மனிதாபிமானமிக்க செயலுக்கு காவல்துறை அதிகாரி, வருவாய்துறை கோட்டாச்சியர் மற்றும் பலர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.