கள்ளக் காதலனுடன் வாழ ஆசைப்பட்டு கணவனை ரெயிலிருந்து தள்ளி விட்ட பெண் – நடந்தது வேறு!

Share this News:

சென்னை (02 ஜன 2020): கள்ளக் காதலனுடன் வாழ ஆசைப்பட்ட பெண் கணவனை கொலை செய்வதற்காக ரெயிலிருந்து தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (33). அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி அஸ்வினி (26). இத்தம்பதிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில், கருத்து-வேறுபாடு காரணமாக சில நாள்களுக்கு முன் கணவர் மற்றும் குழந்தைகளிடமிருந்து விலகிய அஸ்வினி பெரம்பூர் அடுத்த செம்பியத்தில் உள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்தும், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

குழந்தைகளுடன் தனியாக வசித்துவந்த ராஜேந்திரன் கடந்த 29-ம் தேதி மதியம் ஆவடியிலிருந்து திருத்தணிக்கு மின்சார ரயிலில் சென்றுகொண்டிருந்தார். அரக்கோணம்-திருத்தணி ரயில் பாதையில் உள்ள `காட்டு கேட்’ என்ற இடத்தில் ஓடும் ரயிலிலிருந்து ராஜேந்திரனை மூன்று பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாகக் கீழே தள்ளிவிட்டனர். இதில், பலத்த காயமடைந்த அவர் தட்டுத் தடுமாறி எழுந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு நடந்தே சென்று சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.

பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, அரக்கோணம் ரயில் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து ராஜேந்திரனின் மனைவி அஸ்வினியைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். `கணவனைக் கொலை செய்ய முயற்சி’ செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

அஸ்வினி போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில், “என் தம்பி கமலேஸ்வரன் (21). அவரின் நண்பரான அனு ரகுவம்சி (23) பெரம்பூர் செம்பியம் பகுதியில் வசிக்கிறார். எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்துசென்றார் அனு ரகுவம்சி. இதனால் அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.

இது, என் தம்பிக்கு இதுநாள் வரை தெரியாது. காதலன் அனு ரகுவம்சியை அடிக்கடி தனிமையில் வரவழைத்துச் சந்தித்தேன். எங்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமானதால், கணவருடன் வாழ எனக்குப் பிடிக்கவில்லை. சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டுக்கு வந்த பிறகும், `கணவருடன் சேர்ந்து வாழுமாறு’ பெற்றோரும் உறவினர்களும் கட்டாயப்படுத்தினர். காதலன் ரகுவம்சியைத் தனிமையில் சந்தித்து அழுதேன். கணவரைக் கொலை செய்ய அவர் திட்டம் வகுத்துக் கொடுத்தார்.

என் தம்பியையும் காதலன் தூண்டிவிட்டார். ஏற்கெனவே, அக்காவைக் கொடுமைப்படுத்துவதாக நினைத்து ஆத்திரத்திலிருந்த என் தம்பியும் எங்களின் திட்டத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தார். சம்பவத்தன்றுகணவர் ராஜேந்திரன் ரயிலில் செல்வதைத் தெரிந்துகொண்டு நாங்களும் பின்தொடர்ந்து சென்றோம். நான் வேறு பெட்டியில் ஏறிக்கொண்டேன். என்னுடைய காதலனும், தம்பியும் அவர்களின் நண்பரான தினேஷ் (22) என்பவரும் கணவர் இருந்த பெட்டியில் ஏறி முகம் காட்டாமல் மறைந்துகொண்டனர்.

படிக்கட்டு ஓரத்தில் நின்று பயணித்த ராஜேந்திரனை மூன்று பேரும் சேர்ந்து கீழே தள்ளிவிட்டனர். `ராஜேந்திரன் இறந்திருப்பார்’ என்று நினைத்து மகிழ்ச்சியைக் கொண்டாடினேன்’’ என்று கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர் விசாரணையில், அஸ்வினிக்கு மேலும் சில ஆண் நண்பர்களுடனும் தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது. அஸ்வினி மற்றும் அவரின் காதலன் அனு ரகுவம்சி, தம்பி கமலேஸ்வரன், நண்பர் தினேஷ் ஆகிய 4 பேரையும் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Share this News:

Leave a Reply