குன்னூரில் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – 7 க்கும் மேற்பட்டோர் பலி!

Share this News:

குன்னூர் (08 டிச 2021): குன்னூரில் இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மீட்கும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. சம்பவ இடத்தில் நீலகிரி கலெக்டர் அம்ரித், எஸ்.பி.,ஆசிஸ் ராவத், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணியினை விரைவுப்படுத்தி வருகின்றனர்

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு, விமானப்படை உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலை 4.30 மணியளவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்

மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *