சென்னை (14 நவ 2019): சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்திஃப் மரணம் தொடர்பான வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்துள்ள கிளி கொல்லூர் ஊரைச் சேர்ந்தவர் பாத்திமா லதீப்.. இவர் சென்னை ஐ.ஐ.டியில் முதலாமாண்டு MA humanities என்ற பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். மேலும் இவர் ஐ.ஐ.டி வளாக சரவியூ விடுதியில் கடந்த 9 ஆ,ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு மத ரீதியிலான துன்புறுத்தலே காரணம் என்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.
அவருடைய தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக பேராசிரியரைக் கைது செய்யவேண்டும் என்று கோரி இன்று மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், சென்னை மாவட்ட ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் ஐ.ஐ.டி வளாகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். ஐ.ஐ.டி வளாகத்துக்குச் சென்ற அவர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விடுதி உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டார். மேலும், பேராசிரியர் பத்மநாபன் உள்ளிட்ட பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.விஸ்வநாதன், ‘மாணவி உயிரிழந்த இடத்தைச் சென்று பார்த்தேன். உண்மையை அறிந்துகொள்வதற்கு பலரிடம் விசாரணை நடத்தினேன். இந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கில் சிறப்புக் கவனம் செலுத்த கூடுதல் ஆணையாளர் தலைமையில் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.