சென்னை (18 பிப் 2020): திட்டமிட்டபடி சிஏஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நாளை (பிப் 19) நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன் தெரிவித்துள்ளார்.
சிஏஏ சட்டத்தை எதிர்த்து நாளை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடுவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தன.
ஆனால். இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய மக்கள் மன்ற நிர்வாகி வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் விசாரணையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சென்னையில் அமைதியான போராட்டங்கள் நடத்த 13 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆகவே தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செய்ய அனுமதிக்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், சிஏஏவுக்கு எதிராக நாளை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன் தெரிவித்துள்ளார். அதில், இந்த தடை உத்தரவு எங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. நாங்கள் இந்த வழக்கில் மனுதாரர்கள் இல்லை. அதனால் நாங்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதற்கான தடை எங்களுக்கு பொறுந்தாது என்றும், நாளை தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாத வகையில் திட்டமிட்டபடி கண்டிப்பாக போராட்டம் நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.