சென்னை (12 ஏப் 2020): “ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் தன்னார்வலர்கள் உணவு அளிக்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்திருப்பது ஏழை கூலித் தொழிலாளிகளின் பட்டினிச் சாவுக்கு வழி வகுக்கும்,” என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடங்காய்ச்சிகள். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் நிறைவேற்றி வருகின்றன.
தற்போது கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற காரணம் சொல்லி நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்யும் அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இச்சேவையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டள்ளது. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது உள்ளாட்சி அலுவலர்களிடம் மட்டுமே நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் இதனை மீறுபவர்கள் மீது ஊரடங்கு சட்டத்தை மீறியதாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்டக் காவல்துறை அலுவலர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கிய மக்களில் அன்றாடம் உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் வாழும் உழைப்பாளிகள். முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர். இவர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் செய்யும் உதவியைத் தவிர வேறு உதவியில்லை.
முதியோர்களுக்கு மருந்துப் பொருட்களும், ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொருட்களையும் அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் விநியோகிக்கவில்லை எனில் முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோரின் உயிர் வாழ்வு என்பது கேள்விக்குறியாகிவிடும். அரசு இயந்திரத்தை மட்டும் வைத்து தமிழகத்தில் உள்ள அனைவரின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்வது இயலாத காரியமாகும். இது பட்டினிச் சாவிற்குக் கூட வழிவகுத்து விடும்.
அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவிற்கு எதிரான இந்த யுத்தத்தில் பாடுபட வேண்டும் என்ற நிலையில் அரசியல் மாச்சரியங்களால் தமிழக அரசு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, தமிழக அரசு இந்த அசாதாரண சூழ்நிலையிலும் அரசியல் மாச்சரியங்களைத் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் உதவிகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பொதுமக்கள் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மக்களுக்கு உதவிட பிறப்பித்துள்ள தடை உத்தரவைத் தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும்”.
இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.