சட்டத்திற்கு விரோதமான செயலை தடுத்தேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

Share this News:

சென்னை (12 மார்ச் 2022): ஜாமினில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது பதிவான மூன்று வழக்குகளிலும் தற்போது ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில், இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார். திமுக அரசுக்கு எதிராகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியபடி வந்த அவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “பொய் வழக்குகள் போடுவது, அதிமுக தொண்டர்கள் மீது அராஜகத்தை கட்டவிழ்த்துவிடுவது மூலம் எப்படியாவது கழகத்தை ஒழித்து அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஸ்டாலின் செயல்படுகிறார். அந்த வகையில், என் மீது ஒரு பொய் வழக்கு போட்டுள்ளார்கள்.

உள்ளங்கை நெல்லிக்கனிபோல, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல வடசென்னை பகுதிக்கு உட்பட்ட ராயபுரம் தொகுதியில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளாக 40 சமூக விரோதிகள் ஒன்று சேர்ந்து வாக்குச்சாவடி மையத்தை கைப்பற்றினார்கள். இது சட்டத்திற்கு விரோதமான விஷயம். இதை காவல்துறை தடுக்காத சூழலில், ஜனநாயக ரீதியில் உள்ளே சென்று நாங்கள் தடுக்க முயற்சித்தோம். அவர்கள் எங்களைப் பார்த்தவுடன் ஓடும்போது, கட்சிக்காரர்கள் அவர்களை அழைத்து வருகின்றனர். நாங்கள் பிடித்தவர் மீது 14க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதுதான் திமுகவில் உறுப்பினராக தகுதிபோல. அவரை எங்கள் கட்சிக்காரர் என ஸ்டாலினே சான்றிதழ் கொடுத்துள்ளார். நாங்கள் யாரும் அவரை அடிக்கவில்லை. காவல்துறை தன்னுடைய கடமையைச் செய்திருந்தால் எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது” எனத் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *