புதுடெல்லி (25 நவ 2020): அஹமது படேல் இல்லாமல் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது? என்று தெரியவில்லை என அஹமது படேலின் நண்பரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான அகமது படேல் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவிட் பாதிப்பால் காலமானார். அவரது உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான கபில் சிபல் முதல் நபராக படேல் இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அஹமது படேல் இல்லாமல் காங்கிரஸ் என்ன செய்யும் என்று தெரியவில்லை என்று கபில் கண்களில் கண்ணீருடன் கூறினார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “அஹமது இவ்வளவு சீக்கிரம் கிளம்புவார் என்று நினைக்கவில்லை அவர் மிகவும் கனிவானவர். ஒருபோதும் கோபப்பட்டதில்லை. நெருக்கடி காலங்களில் காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைக்க அவர் எப்போதும் முயன்றார், ”என்று சிபல் மேலும் கூறினார்.
மேலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது, அவர் ஒருபோதும் தனக்காக எதையும் விரும்பவில்லை, . அவருக்கும் எனக்குமான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவரது நினைவு மகத்தானது. “அவர் எங்களை விட்டுப் பிரிந்தார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.” என்று கபில்சிபல் கூறினார்.