புதுவை (05 ஜன 2020): புதுவை ஆளுநர் கிரண் பேடி, அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த போலி வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் சூரியனில் இருந்து வெளிப்படும் சப்தம் “ஓம்’ என்ற மந்திரத்தை ஒத்து இருப்பதாக அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது. ஆளுநரால் பகிரப்பட்ட அந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று சுட்டுரையில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
— Kiran Bedi (@thekiranbedi) 4 January 2020
ஆளுநர் விளக்கம்: இதுகுறித்து ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சல் மூலம் சனிக்கிழமை வெளியிட்ட விளக்கத்தில் “அந்த விடியோ போலியானாலும் அதைக் கேட்பது மதிப்பு வாய்ந்ததாகும். அது உள்மனதுக்கு அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வருகிறது.
அந்த வீடியோ போலியாக இருந்தாலும் அதைக் கேளுங்கள். இது தாக்கத்தால் நிறைந்துள்ளது. இதைப் பதிவிட்டபோது நான் அதை உணர்ந்தேன். அதைக் கேட்பதன் மூலம் ஒருவர் அதிர்வுகளைப் பெறுகிறாரா, இல்லையா? என்பதைப் பார்க்க வேண்டும். உடலில் ஆற்றல் பகிரப்படுகிறது என்பதை நான் நம்புகிறேன். அதனால்தான் நான் தினமும் காலையில் நேர்மறையான எண்ணங்களைப் பதிவிடுகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
போலியான வீடியோக்களையும் செய்திகளையும் பாஜக நாடெங்கிலும் பரப்பி வரும் சூழலில், “போலி என்றாலும் நல்லது” என்று ஒரு ஆளுநரே கூறியுள்ளது இந்தியாவில் அதிர்ச்சியலைகளை கிளப்பியுள்ளது.