சென்னை கொத்தவால் சாவடி மூடல்!

Share this News:

சென்னை (07 ஜூன் 2020): நாடு முழுவதும் தமிழகம் உள்பட கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மொத்தம் 1,458 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அளவில் உள்ளது.

இதனால், சென்னை ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட கொத்தவால்சாவடி சந்தையை இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த மே மாதத்தில் ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்தது. ராயபுரம், மற்ற மண்டலங்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருந்தது. இதனால் கொத்தவால்சாவடி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் கடந்த மே 25ந்தேதி முதல் சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்நிலையில், தொற்று எண்ணிக்கை ராயபுரத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொத்தவால்சாவடி சந்தை மீண்டும் ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது. இந்த நடைமுறை இன்று முதல் அமலாகிறது.


Share this News: