சென்னை (11 ஜுன் 2021): சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படுகிறதா? என்ற ஓபிஎஸ்ஸின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களாகவே ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படும் என்ற செய்திகள் திடீரென கிளம்பின.. எனவே, நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினுக்கு, ஓபிஎஸ் ஒரு அறிக்கை விடுத்திருந்தார்..அதில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றும் முடிவை முதலமைச்சர்கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில், புதிய பன்நோக்கு மருத்துவமனை அமைப்பதில் அரசியல் உள்நோக்கம் இல்லை.. புதிதாக மருத்துவமனை மட்டுமே கட்டப்படுகிறது.. முதல்வர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் சொன்னதை போல, தென்சென்னையில் மருத்துவ கட்டமைப்பை உயர்த்துவதற்கு இன்னமும் 4 ஏக்கர் நிலப்பரப்பில் கூடுதல் கட்டிடங்களை கட்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க முடிவெடுத்தார்.
அந்த வகையில்தான் அறிவிப்பையும் வெளியிட்டார்.. 250 கோடி ரூபாயில் புதிதாக அமையவிருக்கிற பன்னோக்கு மருத்துவமனை கிண்டியில் உருவாகிறது.. அதுமட்டும்தான் உண்மை.. ஏன்? புதிய மருத்துவமனை வரவே கூடாதா? என்று தெரிவித்தார்.