சென்னை (17 ஜூன் 2021); யூடுப் மூலம் பல பெண்களிடம் ஆபாசமாக பேசிய யுடூபர் மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ம
யூடியூப் சேனல் நடத்தி வரும் மதன் என்பவர் தனது யூடியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரத்தில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை மதன் பேசுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலத்தை சேர்ந்த மதன், தலைமறைவாக உள்ளார். அவரை தேடிக்கண்டுபிடிக்க சேலம் விரைந்த போலீசார், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் மதன் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதனின் சேனலுக்கு நிர்வாகியாக செயல்பட்டதால் போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் மதன் தலைமறைவாக இருந்து கொண்டு தனது ரசிகைகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மதன் பெண்களுடன் ஆபாசமாக பேசிய ஆடியோக்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போதைய ஆடியோவில் மதன் பேசும் பேச்சுக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.