மதுரை (13 ஆக 2021): ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 77.
சுவாசப் பிரச்னையால் அவதிப்பட்ட மதுரை ஆதீனம், கடந்த 9 ஆம் தேதியன்று மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம், இன்று இரவு 9.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று.
இதன் தலைவராக 292 வது குருமகா சந்நிதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார்.
சைவமும் தமிழும் இரு கண்கள் என வாழ்ந்து வந்தவர் ஆதீனம் அருணகிரிநாதர். தமிழ் தொண்டு, சமூக தொண்டு, ஆன்மீக தொண்டு என ஈடுபட்டு வந்தவர்.
அதேவேளை அரசியலிலும் தனது கருத்துக்களை உறுதியோடு பேசி வந்தவர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டி வந்தார்.
இஸ்லாமிய மதக் கொள்கைகளில் அதீத ஈடுபாடு கொண்டு பல தலைவர்களுடன் நட்பு பாராட்டி வந்த மதுரை ஆதீனம், மத நல்லிணக்கத்திற்கு பெரும் முன்னுதாரணமாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்து முஸ்லிம்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்தத் துடிக்கும் விஷம சக்திகளுக்கு இடையே, மத நல்லிணக்கத்திற்கு பேர் போன மதுரை ஆதீனத்தின் மறைவு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.