ஆர்எஸ்எஸ் குறித்து சொன்னது என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்!

Share this News:

சென்னை (20 ஜூன் 2021:ஆர்.எஸ்.எஸ். குறித்து கூறியது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பு ஊசி முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:

கொரோனா தடுப்பூசி போடும் பணியை மக்கள் இயக்கமாக செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தான் நானும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டேனே தவிர ஆர்.எஸ்.எஸ். ஒரு மக்கள் இயக்கம் என்று எப்போதும் கூறியது இல்லை. இவ்வாறு மா. சுப்பிரமணியன் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “தமிழகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 11,490 பேர் பயன்பெறும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் இப்பகுதியில் வசிப்போருக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும்.

நீட் தேர்வைத் தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தேர்வுக்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும்.

நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு பத்து நாட்களில் தங்கள் அறிக்கையை சமர்பிக்க உள்ளது. அதன்பின்னர் முதல்வர் முடிவு எடுப்பார். தற்போதைய நிலையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகுங்கள்.. நீட் தேர்வு வரவில்லை என்றால் மகிழ்ச்சி. ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பாக தேர்வு என அறிவித்துவிட்டால் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே படிக்க சொல்கிறோம்.

மத்திய அரசு ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு தருவதாக சொன்ன தடுப்பூசியில் மீதமுள்ள 18 லட்சம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் தமிழகம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதத்திற்கான தடுப்பூசி எண்ணிக்கையை மத்திய அரசு 71 லட்சமாக உயர்த்தி தருவதாகவும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை கொடுத்தாலும் அதனை செலுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *