கோவை (12 செப் 2020): தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ- மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு முதியோர் உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார்.
அவரிடம் வருகிற 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளிக்கும் போது, தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது. இது குறித்து எந்த தகவலும் வரவில்லை. வந்தால் தகவல் தெரிவிக்கிறேன் என்றார்.
தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ- மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டை விட அதிக மாணவ- மாணவிகள் சேர்ந்து உள்ளனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த மாதம் கடைசி வரை நடைபெறும். பெற்றோர் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க படையெடுத்து வருகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.