தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை!

Share this News:

சென்னை (28 மே 2020): கொரோனாவை எதிர்த்துப் போராடும் எங்கள் உழைப்பை கொச்சைப் படுத்தாதீர்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இன்று 12246 பேருக்கு இன்று சோதனை செய்யப்பட்டுள்ளது. 4,55,356 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தியாவில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு மருந்தே இல்லை . ஆனாலும் குணப்படுத்தி வருகிறோம். மருத்துவர்கள் படும் கஷ்டத்தை பார்த்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள். ஆதங்கத்தோடு சொல்கிறேன் மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள். தங்கள் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களை நீங்கள் கொச்சைப்படுத்த வேண்டாம்.

நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டுதான் நோயாளிகளை குணப்படுத்தி வருகிறோம். உலக நாடுகள் நம்மை பாராட்டுகிறது. மனசாட்சியோடு பேசுங்கள். மருத்துவமனை வசதிகளை அதிகரித்து வருகிறோம். மருத்துவர்களை அதிகப்படுத்தி வருகிறோம். மூன்று மாதமாக வேறு பணிகள் எதையும் செய்யவில்லை. உலக நாடுகள் எல்லாம் திணறுகிறது. எங்கள் உழைப்பை நீங்கள் கொச்சைப்படுத்த வேண்டாம். நீங்கள் பாராட்ட வேண்டாம். ஆனால் விமர்சிக்காமல் இருங்கள் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,757 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News: