சென்னை (14 ஜன 2023): பள்ளிவாசல்களுக்கான பராமரிப்பு நிதியை 10 கோடியாக அதிகரித்து அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கக்கூடிய தீர்மானத்தில் நான் பேசியபோது தமிழ்நாடு வக்ஃபு வாரியம் வழியாக தமிழ்நாடு பள்ளிவாசல்களுக்கு வழங்கக்கூடிய Major Repair Grant (MRG) நிதியை அதிகரித்து தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை 11.01.2023 அன்று முன்வைத்தேன். கடந்த காலங்களிலே அது வெறும் ஐந்து கோடியாக இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதனை ஆறு கோடியாக உயர்த்தியது. அதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைத்தேன். அதனடிப்படையில், இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு பதிலுரைத்துப் பேசிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தொடக்கத்திலேயே என்னுடைய கோரிக்கையை மேற்கோள் காட்டி, பள்ளிவாசல்களுக்கான பராமரிப்பு நிதியை Major Repair Grant (MRG) பத்து கோடியாக உயர்த்தி தரப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பிற்காக மனிதநேய மக்கள் கட்சி சார்பாகவும், தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாகவும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நகர்ப்புற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் இந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி, 1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மனமார வரவேற்கின்றேன்.”
இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.