விழுப்புரம் (12 மே 2020): சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொன்றவர்களை தூக்கிலிட சிறுமியின் மரண வாக்குமூலமே போதுமானது என்று பொதுவான கருத்து நிலவுகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை – கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணறவைத்து; கலியபெருமாளும் முருகனும் சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயஸ்ரீ, நீதித்துறை நடுவரிடம் இதுகுறித்து மரண வாக்குமூலம் அளித்துள்ளார். 90% தீக்காயத்துடன் போராடிய ஜெயஸ்ரீ, சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார்.
இவ்விவகாரம் ஒட்டு மொத்த தமிழர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையே குற்றவாளிகளை தப்பிக்கவிட விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்காமல், சிறுமியின் மரண வாக்கு மூலத்தின் அடிப்படையில் விரைவில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் மட்டுமல்லாமல், நெட்டிசன்களும் குரல் எழுப்பியுள்ளனர்.